Saturday 31 March 2012

நீயும் நானும்


 கல்லூரிகளில் பேசச் சொல்கிறபோது,பெரிய மனிதர்கள் இருக்கிற மேடைகளில் அமர வாய்ப்பு கிடைக்கிறபோது ஆச்சரியமான சில மனிதர்களை கவனிப்பேன்.அமைதியாய் இருப்பார்கள்.அருகில் 
வந்து பவ்யமாக ஒருவர் ஏதொ சொல்வார்.அதனை கவனித்துக் கேட்பார்கள்.அதிர்ந்து கூட பேச மாட்டார்கள்...மறுக்காமல் செய்வார்கள். 


அந்த கல்லூரியின் நிறுவனராகவோ,அல்லது அந்த நிறுவனத்தின் தலைவராகவோ சகல அதிகாரங்கள் கொண்ட மனிதர்களாக அவர்கள் இருப்பார்கள்.அவர்கள் விரல் அசைவுக்குப் பலர் ஓடி வரத் தயாராக இருப்பார்கள்.ஆனாலும்,அவர்கள் பாந்தமாக இருப்பார்கள்...நட்பாக சிரிப்பார்கள்.

இப்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்குச் சென்று இருந்த போதும் அப்படி ஒரு மனிதரை பார்க்க நேர்ந்தது.மேடையில் பேசுகிற எல்லோருடைய பேச்சையும் கூர்ந்து கவனித்தார்.நிகழ்ச்சி முடிந்து வருகிறபோது ஒரு தந்தை மகனுடன் வந்து 'சார்....இவன் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்,
நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார்' என்றார்.அந்த பையனோ, 'அவர் சொல்றது எல்லாத்தையும் அப்படியே கேட்கணும்கறார்.நான் சொல்கிற எதையும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்' என்றான்.


இந்த பிரச்னை நம் வீடுகளின் தினசரி பிரச்னைதான்.நான் அவர்கள் இருவரையும் அந்த பெரியவரிடம் அழைத்துச் சென்றேன்.அவர் இவர்களுக்கு என்ன சொல்லுவார் என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆசையாய் இருந்தது.

பெரியவர் நீண்ட நேரமெல்லாம் பேசவில்லை. இரண்டே வரிகளில் 
முடித்து கொண்டார். 'நீங்கள் சொல்வதை உங்கள் பிள்ளை கேட்க வேண்டுமென்றால்,உங்கள் பிள்ளை  சொல்வதை செவி கொடுங்கள்.
உன் அப்பா உன் கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 
நீ அவர் சொல்வதைப் புரிந்துகொள்.'

இப்போது பெரியவரும் நானும் காபி குடித்துக்கொண்டு இருக்கிறோம்.நான் மெதுவாகக் கேட்டேன்,'அதிகாரம் கைக்கு வந்துவிட்டால்,கீழ்ப்படிதல் தானாக வந்து விடுமா சார்? நான் அப்படிப்பட்ட நிறையப் பேரைப் பார்த்து இருக்கிறேன் என்றேன்.'அவர் அலுத்தாமாகச் சொன்னார்,'இல்லை தம்பி. கீழ் படிதலோடு இருந்தால்தான் அதிகாரம் செய்கிற உரிமை கிடைத்தது.அடுத்தவர் சொல்கிற உண்மையும் நியாயத்தையும் நான் கவனித்துக் கேட்கிறேன்.அதனால் நான் சொல்வதை மற்றவர்கள் கேட்கிறார்கள்.இது ஒன்னும் கம்பசூத்திரம் எல்லாம் இல்லை,சாதரண விஷயம் என்றார்.

அவர் சாதாரணமாக சொன்னாலும்,ரொம்பவே ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் அது.'அப்பாக்கள் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை' என்று பிள்ளைகளும், 'என் பிள்ளை சொல்பேச்சு கேட்பது இல்லை' என்று அப்பாக்களும் மாறி மாறிப் புலம்புவது நிறைய வீடுகளில் கேட்கிறது.

வயதுக்கு வந்த பிறகு கீழ்ப்படிதல் என்பது அடங்கிச் செல்லுதல் 
அல்லது அடிமைபோல் நடத்தப் படுதல் என்ற எண்ணத்துக்குள் பயணிக்க ஆரம்பிக்கிறது.அப்பா இன்னிங்ஸ் முடிஞ்சு போச்சு, இனி என் ஆட்டம் 
என்று இளைய தலைமுறை வேகம் எடுக்கிறது. இருவரும் அதிகாரம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.ஆனால் பெரியவர் சொன்னதுதான் உண்மை.அதிகாரம் செய்ய ஆசைப்படுபவன் முதலில் அடுத்தவன் கருத்துக்குக் காது கொடுக்க வேண்டும்.


 இங்கே இருக்கின்ற பெரும்பாலான சூழலில் கீழ்ப்படிதல் அல்லது அடுத்தவர் சொல்வதைக் கேட்டல் என்பது வேறு வழியின்றி நடக்கிற,முணுமுணுப்புடன் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அல்லது பயந்து கொண்டு நிர்பந்தத்துக்காகப் பணிந்துபோவதாக நடக்கிறது.

கீழ்ப்படிதல் என்பது கட்டாயத்தின் பேரில் நடக்கிற விஷயமாக இருப்பதால்தான்,அப்பாக்கு முன் பவ்யமாகத் தலையாட்டிவிட்டு,
நண்பனிடம் வந்து அப்பாவைத் திட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறது. 
அவர் சொல்கிற விஷயத்தில் இருக்கிற நல்ல விஷயத்தில் இருக்கிற 
நல்லது கெட்டதை ஆராயாமல், இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான் 
என்று  நினைக்க வைக்கிறது.

அன்னப் பறவையை தூது விடுகிற மாதிறி எல்லாவற்றுக்கும் அம்மாவையே தூது விட்டுக்கொண்டு  இருந்தால், அப்பா என்பவர் அதிகாரம் செய்கிற மனுஷராகவும், நீங்கள் அடங்கிப்போகிற சேவகனாகவுமே காலம் தள்ள முடியும். அப்பாவை அதிகாரத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கிற காரணத்தால்தான், அவரின் வார்த்தைகள் ஆணைகளாகத் தெரிகின்றன.
 இந்த இடைவெளியை இட்டு நிரப்ப ஏதுவான சூழல் எது கிடைத்தாலும் அதைப் பயன்படுத்துங்கள்.

நாம் சொல்வதை நம் பிள்ளை விரும்பித்தான்  ஏற்றுக்கொண்டு இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு, 'என் பிள்ளை என் பேச்சை மீற மாட்டான்' என்று பெருமை பேசிக்கொள்கிற அப்பாக்கள் நிறையப் பேர் உண்டு. உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கு இடையிலான புரிதலே பொய்த்துப் போகிறது.

அம்மாக்களுக்கு.........
                            
                               அப்பா என்கிற மனிதரை அச்சுறுத்தும் ஆயுதமாக,அதிகாரத்தின் பிம்பமாகி, தண்டனை தருகிற அதிகாரியாகப் பிள்ளைகளின் பதியவிடாதீர்கள்

அப்பாக்களுக்கு.........
                            
                             கௌதம்மேனன் படத்தில் வருகிற அப்பாக்கள் சினிமாவில்தான் வர வேண்டும் என்றில்லை. வீட்டிலும் இருக்கலாம்!...    





                   

No comments:

Post a Comment