Sunday 20 November 2011


இலங்கை தமிழர்களின் அவல நிலை





தேசியம் மற்றும் தேச பக்தி என்பது தேவையானதா, எல்.டி.டி ஒரு தீவிரவாத இயக்கமா அல்லது விடுதலைக்குப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுவா போன்ற சர்ச்சைகள்  நடை பெறுகின்றன. மேலும் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த போருக்கு எதிரான தமிழர்களின் கொந்தளிப்பின் காரணம்  "மூலப் படிம உணர்வா" (உயிரோசையில் தமிழவன் எழுதிய "தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு" நினைவிருக்கலாம்) என்ற விவாதம் நாகர்ஜுனன் அவர்களின் வலைத்தளத்தில் ஓர் உயர் தளத்தில் (higher dimension)  நடக்கிறது. இதைப் பற்றிய பரவலான விவாதத்திற்கு உகந்த நேரம் இது தான். கட்டாயமாக ஓர் அறுபடாத நூலிழை போல் தமிழ் உணர்வு என்ற சக்தி உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே இழையோடுகிறது. ஆனால் இந்த சக்தியை ஒருங்கிணைத்து ஒரு குறிக்கோளை நோக்கி நகர்த்திச் செல்ல தன்னலமற்ற, வியாபார நோக்கமில்லாத தலைமை தேவைப்படுகிறது. அப்படி ஒரு தலைவர் இன்று இல்லை. எதிர் காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது. காலம் பதில் சொல்லும்.


இந்தியாவின் ஆங்கில இதழ்கள் மற்றும் விடுதலிப் புலிகளை கடுமையாக எதிர்க்கும் என்.ராம், சோ, ஜெயலலிதா, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை அரசியல் பிரச்சனையாக மட்டுமே கருதுகிறார்கள். இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை. எனவே அதனை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம். அதற்கு நேர்மாறாக முழுமையாக சமூகப் பிரச்சனையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் அணுகுகிறார்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஆனால் எல்லோரும் ஓத்துப் போகும் ஒரே அம்சம் இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் எல்லா உரிமைகளுடனும் நலமாக வாழ வேண்டும் என்பதுதான். இதற்கு இரண்டே தீர்வுதான் உள்ளது. ஒன்று தமிழ் ஈழம். இன்றைக்கு இது சாத்தியமா?

பல இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி இலங்கை தமிழர்களுக்காகவும், தனி ஈழம் கேட்டும் போராடிய நிலையில், விடுதலிப் புலிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளனர். நீண்டகால போர், தவறான அணுகுமுறை, எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்த நடவடிக்கைகள், தீவிரவாத குழு என்ற முத்திரை, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற சுமை, கிழக்குப் பகுதியில் புலிகளின் மத்தியில் ஏற்பட்ட பிளவு  போன்ற காரணங்களினால் இன்று வலுவிழந்து நிற்கின்றனர் விடுதலைப் புலிகள். அதே நேரத்தில் இராணுவம் பெரிய அளவில் வெற்றி அடைந்து வரும் இன்றைய நிலையில் இலங்கை அரசு இறங்கிவந்து தமிழ் ஈழம் வழங்குவது ஒரு கனவாகத்தான் இருக்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தையில் தேவைப்படும் ராஜ தந்திரம் இல்லாமல் ஆயுத போராட்டத்தை மட்டும் வைத்து தனி நாடு அடைந்து விடலாம் என்ற புலிகளின் எண்ணம் மிகவும் தவறானது. 2000ம் ஆண்டு நடந்த போரில்  புலிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றும், இலங்கை ராணுவமும், அரசும் பின்னடைவில் இருந்த நேரத்தில் நார்வே மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் குறைந்த பட்சம் இலங்கையில் ஒன்றிணைந்த (fedaral) தனி தமிழ் மாநிலம் பெற்றிருக்க வாய்ப்பிருந்தது. அதையும் தவற விட்டார்கள். உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் துணை இல்லாமல் தனி நாடு அடைவது என்பது கனவாகவே முடிந்து விடும் என்று புலிகளின் தலைமை உணர வேண்டும். அதற்கான தீவிர அரசியல் முயற்சியில் ஈடுபடுவதுதான் புலிகளுக்கு இன்றுள்ள ஒரே வழி.  முதற் கட்டமாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற அடையாளத்தை உடைத்து, இந்திய அரசு அங்கீகரிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். புலிகளின் இன்றைய செயல் பாடுகளில் பெரிய அளவிற்கு மாற்றம் இல்லாமல் இந்த இலக்கை அடைய முடியாது. இதற்கு தமிழ் நாட்டில் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பாலமாக இருந்து உதவலாம். ஆனால் அதற்கு முன்பாக புலிகள் தங்கள் இயக்கத்தின் மேல் மற்றவர்களுக்கு உள்ள நம்பகத்தன்மையை மேம்படுத்தவேண்டும்.

தமிழர்களின் விவகாரத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டை எழுதுவதற்கே மிகவும் வெட்கமாக இருக்கிறது. பண்டாரநாயக இலங்கையின் சுதந்திரத்திற்கு பிறகு சிங்கள இன வெறி என்ற விஷ விதையை விதைத்ததின் பலன், இன்று ஆயிரக்  கணக்கில் அப்பாவித் தமிழர்கள் மற்றும் சிங்கள ராணுவத்தினரின் உயிர்கள் அறுவடையாகின்றன. அதற்கு பிறகு இலங்கையில் இருந்த ஆட்சியாளர்கள் மறைமுகத் திட்டத்தை M.S.S. பாண்டியன் என்ற சமூகவியல் அறிஞர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இன்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே அமெரிக்க அதிபர் புஷ்ஷைப் போல் முரட்டுப் பிடிவாதம் கொண்டிருக்கிறார்.தமிழர் பிரச்சனை போரினால் தீர்க்கப் பட முடியாத ஒன்று என்று இன்னும் அவருக்கு உறைக்கவில்லை. இவருடைய குறிக்கோள் போரில் வெற்றி பெற்று(?) அரசியல் தீர்வு என்ற பெயரில் கிழக்குப் பகுதியில் வெள்ளையன் தலைமையில் ஏற்படுத்தியது போல இலங்கையின் வடக்கில் பெயரளவில் ஒரு பொம்மை அரசாங்கத்தை உண்டாக்குவதுதான். புலிகளை வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் ஆதரவற்ற தமிழர்கள் மேல் அடக்குமுறையை ஏவி விட ராஜபக்சே நினைத்தால், அது வரலாற்றில இலங்கை அரசு இழைத்த மிகப் பெரிய தவறாகிவிடும். தமிழர்கள் எதிர் பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் அமையாவிட்டால், இனப் பிரச்சனை மீண்டும் தலை தூக்க நீண்ட நாள் ஆகாது. ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக 30% பணவீக்கத்துடன் திணறிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் இந்த போர் தொடர்ந்தால் ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள இலங்கை மக்களின் வாழ்க்கை சீரழிந்து விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். புலிகள் ஆயுதத்தை கைவிட வேண்டும் என்று கோரும் ராஜபக்சே அதே சமயத்தில் ஒரு பரந்த, தமிழர்கள் ஏற்கத்தக்க, தமிழர்களுக்கு சம அந்தஸ்து அளிக்கக் கூடிய ஜனநாயகத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

இந்த போரினால் மீறப் பட்டுள்ள மனித உரிமைகள் மனித சமுதாயத்தையே தலை குனிய வைக்கும் அளவிற்கு உள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழக மனித உரிமை சங்கம் (UTHR-J) அக்டோபர் 28ம்  தேதி வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மற்றும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்பது போல் போர் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் நிலை உள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் தங்கள் தாய் மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை. இதைப் பார்த்து கண்ணீர் வடிக்க தமிழ் உணர்வு தேவையில்லை. மனிதாபிமானமே போதுமானது. இந்த நேரத்தில் இந்திய அரசின் கடமை மிகவும் முக்கியமானது. இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன?


என்னதான் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்தியா கருதினாலும், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடவேண்டும். விடுதலைப் புலிகளின் பின்வாங்குதலால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பி அவதியுறும் இலங்கைத் தமிழர்களின் நல் வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் தனக்குள்ள நல்லுறவைப் பயன்படுத்தி உலக நாடுகளின் மூலமாக இந்த இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசுக்கு  கடுமையான நெருக்கடி கொடுக்க இதுதான் சரியான தருணம்.மேலும் இந்திய அரசாங்கம் எப்போதுமே இருதரப்பு பேச்சு வார்த்தையைத் தான் வெளிநாட்டுக் கொள்கையில் கடைபிடிக்கிறது. ஆனால் புலிகளுடன் நேரடி தொடர்பு வேண்டாம் என்ற பட்சத்தில், பல தரப்பு பேச்சு வார்த்தை (multilateral talks) நடத்த முன் வரலாம். சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் கொண்ட ஒரு குழு அமைத்து சிங்கள மற்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயலலாம். அதில் "தமிழ் ஈழமா அல்லது ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றிணைந்த தமிழ் மாநிலமா?" என்ற தீர்வுக்கு வரலாம். அதை விட்டு இந்தியா இலங்கைக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை போருக்குத் தீர்வாகாது. இந்தியா ஆயுதம் தரவில்லை என்றால் சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வாங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் உளவாளிகள் அதிக அளவில் இலங்கையில் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, போரினால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதை இலங்கை அரசும், புலிகளும் உடனடியாகக் கை விட வேண்டும். மூன்று லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். மூன்று லட்சம் தமிழ் மக்கள் குறைந்த பட்சத் தேவையான உணவு, உடை,இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாமல் அவதிப் படுகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது நாம் 21ம்  நூற்றாண்டில் இருக்கிறோமா அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இருக்கிறோமா என்று தெரியவில்லை. உலக நாடுகள் மற்றும் குறிப்பாக இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் தலையிட்டு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் இன்று இருந்தால் இந்த அல்லல்படும் தமிழ் மக்களைப் பார்த்து என்ன பாடியிருப்பாரோ?



No comments:

Post a Comment