Sunday, 20 November 2011

இலங்கை தமிழர்,


அடிமை வியாபார ஒழிப்பு நினைவு தினத்தில் உலகம் : புதிய அடிமைகளாய் இலங்கையில் தமிழர்கள்

 உலக வரலாற்றில் 1791 ஆகஸ்ட் 23 முக்கியமான நாள். 22ம் தேதி ஆகஸ்ட் 1791 நள்ளிரவில் சன்டோ டொமினிக்கோவில்
           
                   (இன்றைய கெயிட்டி குடியரசு) ஏற்பட்ட அடிமை மக்களுக்கு இடையிலான புரட்சியே உலகளாவிய நிலையில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்படக் காரணமாகியது என்பது வரலாறு. இதனால் ஆகஸ்ட் 23ம் திகதியை உலக அடிமை வியாபார ஒழிப்பு நினைவு தினமாக கொண்டாடும் வழக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரப் பிரிவின் மரபாக உள்ளது.

ஆபிரிக்க நாடுகளிலிருந்து மக்கள் - ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் விலைக்கு வாங்கப்பட்டும் கட்டாயப்படுத்தப்பட்டும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு உடற்பல வேலைகளுக்காக அள்ளிச் செல்லப்பட்டனர்.
சங்கிலிப் பிணைப்புக்கள் உடன் வாந்தி வெள்ளத்தில் கால்கையை அசைக்கக் கூட இடமின்றி பலமாதங்கள் கப்பலில் மனிதப் பண்டங்களாக ஏற்றி வரப்பட்ட இந்த மக்கள் கடற்பயண நோய்களால் கப்பல்களுக்குள்ளேயே அழிக்கப்பட்டு கடலூள் தூக்கி வீசப்பட்ட சோகவரலாறுகள் பல்லாயிரம். பயணப்படுபவர்களில் ஆறு பேருக்கு ஒருவர் கடலோடு தம் கதை முடித்த காலம் அது.
அது மட்டுமல்ல மரணத்தின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்துக் கரைதொட்டவர்க்கு நித்திரை உணவு இல்லா கடும் வேலைப்பளுக்களும், தங்கள் பெண்கள் சிறுமிகள் காமுகரால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் காட்சிகளைக் கண்டு துடிப்பதும் தான் வாழ்வாகியது. இத்தனைக்கும் மேலாக கறுப்பு மனிதர் அடிமைகள் என்று பட்டம் பெற்ற கொடுமையான வரலாற்றைக் கண்டவர்கள் இந்த ஆபிரிக்க கண்டத்தில் இருந்த கடத்தப்பட்ட மக்கள்.
இந்த மனித அவலம் - இந்த மனிதக் கொடுமைகள் மாற்றம் கண்ட நாள் மனித வரலாறு உள்ளவரை மானிடர்களால் மகத்தான தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்துக் கிடையாது. ஆனால் அன்று சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனிதன் விடுபட்ட இந்நாளில், உலகில் இன்று கூட மானிடர்கள் கண்ணுக்குத் தெரியாத சமுக அரசியல் பொருளாதாரச் சங்கிலிகள் பலவற்றால் பிணைக்கப்பட்ட நிலையில் தவிக்கின்றனர் - துடிக்கின்றனர். இவர்களுள் இலங்கைத் தமிழர்களும் ஒருவராக உள்ள வரலாறு இன்றைய சமகால வரலாறாக உள்ளது.
தங்களுடைய சொந்த நாட்டிலேயே கண்ணுக்கு முன்னால் கொட்டப்பட்ட குண்டுகளினாலும் வீசப்பட்ட எறிகணைகளாலும் கொல்லப்பட்ட தங்களின் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் ஊரவர்கள் நண்பர்கள் பெண்கள் குழந்தைகளை எண்ணி எண்ணி மனம் வெடிக்கும் வாழ்வில் பலர். இன்னமும் தங்கள் உற்றார் உயிருடன் உள்ளனரா எனத் தினம் தினம் முகாங்களுக்கு அலையும் மக்கள் பலர். கண்காணாச் சிறைகளில் தங்கள் கண்மணிகளுக்கு என்ன நடக்கிறதோ என ஏங்கிச் சாகும் மக்கள் பலர்.
தங்களின் சிறைவைக்கப்பட்ட கணவரை அல்லது பிள்ளைகளைத் தேடிச் செல்லும் தமிழ்ப் பெண்களிடம் எங்களைக் காமக்கிழத்தியாய் சில மணியாவது மகிழ்வித்தால் தான் அவர்களைப் பார்க்கலாம் என நிபந்தனை விதிக்கும் நிந்தனை மனிதரை வந்தனை செய்து வாழவேண்டிய நிலையில் தமிழ் மக்கள். உண்ண உணவும் இருக்க இடமும் இன்றி தவிக்கும் மக்கள் ஒரு புறம் இருக்கும் இடத்தையும் செய்யும் தொழிலையும் விட்டு பல்வேறு காரணங்களுக்காகத் துரத்தப்படும் மக்கள் மறுபுறம். இம் என்றால் சிறைவாசம் அம் என்றால் வனவாசம் என்று நாடகமேடையில் ஒலித்த தமிழ் இன்று இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியல் மொழியாக மாறிவிட்ட காலம் இது.
இத்தனைக்கும் மேலாக எங்களுக்கு ஒன்றுமேயில்லை வடக்கில் வசந்தத்திலும் கிழக்கில் உதயத்திலும் வாழ்கின்றோம் எங்களை வளமாக வாழவைக்கும் தெய்வங்களே எனச் சிங்களத் தலைவர்களுக்கும் இராணுவத்தலைமைகளுக்கும் அவர்களுக்கு காவடி தூக்கி வரும் தமிழ்க் குழுக்களுக்கும் தோப்புக்கரணம் போட்டுத் தப்பிப்பிழைக்கும் மக்களாக ஒரு சமுதாயம் இந்த உலகில் வாழ்கிறது என்றால் அதனை அடிமை மக்கள் என்று சொல்லாமல் வேறு எந்தச் சொல் கொண்டு அழைக்க முடியும்.

இதனால் தான் உலக அடிமை வியாபார ஒழிப்பு நினைவு தினத்தில் உலகம் - புதிய அடிமைகளாய் இலங்கையில் தமிழர்கள் என்று இன்றைய சமகாலத்தன்மையைச் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது. தகவலைத் தருகின்றோம். தரவுகளைக் கொடுக்கின்றோம். அதனைத் தளமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்களின் இந்த அடிமை வாழ்விலிருந்து அவர்களை விடுவியுங்கள் என உலகையும் ஐநா வையும் ஏன் எங்கள் கலாச்சாரத்தின் வேராக உள்ள இந்தியாவையும் கேட்க வேண்டிய பொறுப்பில் புலம்பெயர் தமிழர்களும் - தமிழகத் தமிழர்களும் - உலகத் தமிழர்களும் உள்ளனர்.

ஆனால் அவர்களுக்குள்ளும் யார் பெரிது. யார் யாரை ஆள்வது என்ற அடிமை உள்ளம் தான் தொடரும் என்றால் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற துணிவில் மகிந்த சிந்தனையில் சுட்டெரிக்கப்பட மக்களாக இலங்கைத் தமிழர்கள் பொசுங்கிப் போனார்கள் என்பது வரலாறு ஆகலாம். ஆனால் யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன தெய்வம் தம்மோடு இருக்கிறது என்ற மனஉறுதி கொண்டவர்கள் தமிழர்களில் பலர். இதனால் உறுதி உறுதி உறுதி உறுதிக்கோர் உடைவுண்டாயின் இறுதி இறுதி இறுதி என்று குயில் பாட்டில் கூவிய பாரதியின் குரலோசை ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களின் இதயஓசையாக உலகுக்குக் கேட்கிறது. இந்த உறுதியும் தெய்வத் துணையும் நிச்சயம் தமிழர் துன்பம் துடைக்கும் என்பது சத்தியம்.
இலங்கைத் தமிழர் அடிமை வாழ்வில் இருந்து விடுபட்ட நாள் என்று ஒரு தினத்தை அனைத்துலக சமுகம் கொண்டாடும் நாள் தெய்வத் திருவுளம் ஆகுமென்பது நிச்சயத்தில் நிச்சயம். அந்த நாளை விரைவில் வரச்செய்யும் பொறுப்பை மட்டும், கடவுள் புலம் பெயர் தமிழர்கள் - தமிழகத் தமிழர்கள் - உலகத் தமிழர்கள் கையில் கொடுத்துள்ளார் என்பது மட்டும் உண்மையில் உண்மை.
முகப்புப் படம்: பாரிசில் வெளியிடப்பட்ட Johann Moritz Rugendas ன் 'Voyage Pittoresque dans le Bresil' புத்தகத்திலிருந்து.


No comments:

Post a Comment